வெடி தேங்காய் 01
நான்காவதோ இல்லை ஐந்தாவதோ படிக்கும் பருவம். பாட்டி ஊரில் கிராமத்து தேவதை ஒன்றுக்கு பொங்கல். கரகம், ரெகார்ட்டு டான்ஸ், பொய்கால் குதிர, கொறவங் கொறத்தி, நாடகம், ராட்டினம், வெடி, அம்மன் செலைக்கும் அம்மன் தயவுல பக்கத்துல இருக்க அய்யானார் குதிரைக்கும் புது பெயிண்ட், தெரு முழுக்க கலர் கலரா காகித தோரணம், தெருவோரமெல்லாம் பத்து அடிக்கு ஒரு மூங்கில் கம்பு நட்டி அதுல ஒரு ட்யூப் லைட், நையாண்டி, உருமி மேளத்தோட தீச்சட்டி, பூக்குழி, சப்பரம்ன்னு ஊரே களை கட்டி இருக்கு. வயசுப் பொண்ணுங்க எல்லாம் சும்மா சீவி முடிச்சி சிங்காரிச்சு, ஐடெக்ஸ் கண்மை போட்டு, ஸ்டிக்கர் பொட்டு, குங்குமப் பொட்டு, பவுடர்ன்னு வசதிக்கு ஏத்த மாதிரி மேக்கப் போட்டு லைட் வெளிச்சத்துல சும்மா தேவத கணக்கா அங்கிட்டும் இங்கிட்டும் திரிய, ராசபாளையம், விருது நகர் பருத்தி மில்லுல வேல பார்க்கிற பய புள்ளக எல்லாம் சும்மா சோக்கா பேண்ட்டு சட்ட போட்டுகிட்டு கழுத்துல ஒரு கர்சீப சுத்திகிட்டு லுக்கு உடுதுக.
அப்ப நம்ம மக்க பாவம் டாஸ்மாக்க கண்டாகளா இல்ல, சரக்கு தான் இவ்ளோ லேசுல கெடச்சுதா? எல்லாம் பட்டையும் பாக்கெட்டும் தான். மாமமச்சான் அண்ணந்தம்பி அண்டஒண்டல யாராச்சும் ஆருமில இருந்தா மட்டும் பாட்டில் சரக்கு கொஞ்சம் மோந்து பாக்க கெடக்கும். அந்த வரச்சிலயும் கூட்டத்துக்குள்ள அங்கங்க தண்ணி போட்டு சலம்பலும், பக்கத்துல ஒரு கெட்ட பழ வாசமும். கூட்டமெல்லாம் கொறவங் கொறத்திக்குக்கும் கரகாட்டத்துக்கும் தான். இளந்தாரிகள விட பல்லு போன பழசுக ம்ஹூம் இல்ல இல்ல பல்லு போன பெரிசுக ரவுசு தான் பெரிசா இருக்கும். ஆட்டக்காரிகளுக்கு ரூவா மால போடுறதென்ன, ஜாக்கட்டுல ரூவாய குத்துறதென்னன்ன ஒரே அலம்பல் தான்.
இந்த கலாட்டால சிக்கி பார்க்கக் கூடாதது ஏதாச்சும் சின்ன பய நானு பார்த்து கெட்டு போயிருவேன்னு பாட்டி வீட்டு இருந்த தெரு மூர்த்தி அண்ணன் கூட என்னய வேடிக்கை பார்க்க அனுப்பி இருந்தாங்க. மூர்த்தி அண்ணன் பக்கத்தூருல ஒம்பதாப்பு படிச்சிகிட்டு இருந்துச்சி. நல்ல புள்ள. விவசாயக் குடும்பத்துக்கு ஏத்த புள்ள. பள்ளிக்கூடம் விட்டு வந்துச்சின்னா பொத்தக பைய வீட்டுல போட்டுட்டு கஞ்சி குடிச்சிட்டு எரும மாடுகள பத்திகிட்டு மேச்சலுக்கு விடப் பொறப்படும் பொறுப்பான புள்ள. அதாம் மூர்த்தி மேல நம்பிக்க. கொஞ்ச நேரம் கூட்டத்துக்குள்ள அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சோம் நானும் அண்ணனும். ஏலே. நாங்க கொஞ்ச நேரத்துல பள்ளிக்கூட மைதானத்துல வெடி தேங்கா போடப் போறோம். உங்க அவ்வாகிட்ட சொல்ல மாட்டேன்னு சத்தியஞ் செஞ்சி கொடுத்தியான்னா எங்கூட வரலாம்ன்னு மூர்த்தி அண்ணன்.
பட்டினத்து புள்ள நானு வெடி தேங்கா கண்டன இல்ல விடலப் புள்ளக வில்லங்கம் கண்டனா? எனக்கு வேண்டியதெல்லாம் இப்பக்குள்ள ஊட்டுப் பக்கம் தல வக்க கூடாது அம்புட்டு தேன். ஏன்னா எங்க சித்தி அன்னிக்கு ராத்திரி தீச்சட்டி எடுக்குறாங்க. பிரியமா பாசமா இருக்குற சித்தி மஞ்ச சேல கட்டி, மஞ்ச தண்ணிய தலைக்கு ஊத்தி கிட்டு குலவி போட்டுகிட்டு கைல வேப்பில தாங்கலா வைச்சி சட்டி எடுத்து சாமி வந்து ம்ம்ம்ம்ம்ம்ம்னு ஒரு உறுமலோட கண்ணு ரெண்டும் செருக ஒரு ஆட்டம் ஆடினா போதும். எனக்கு பயத்துல டவுசருலயே ஒண்ணுக்கு போற மாதிரி ஆகிப் போகும். அதுலயும் சட்டி கைல ஏறுறதுக்கு முன்னாடி சாமி ஆடிகிட்டு இருக்குற அவங்க காலுல விழுந்து எந்திருக்கிறப்ப, எந்தலைல கைய வச்சி ஒரு அழுத்தி அழுத்தி நெத்தி நெறய விபூதி பூசி மிச்சத்த என் தலைல போடுவாங்க பாருங்க அப்ப எனக்கு ஈரக்கொலயே பதறும். சரி இதுக்கு பதிலா மூர்த்தி அண்ணன் எங்கன கூப்பிட்டாலும் போகலாம்னு தோணிச்சி.
இன்னும் வரும்...
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
//வயசுப் பொண்ணுங்க எல்லாம் சும்மா சீவி முடிச்சி சிங்காரிச்சு, ஐடெக்ஸ் கண்மை போட்டு, ஸ்டிக்கர் பொட்டு, குங்குமப் பொட்டு, பவுடர்ன்னு வசதிக்கு ஏத்த மாதிரி மேக்கப் போட்டு லைட் வெளிச்சத்துல சும்மா தேவத கணக்கா அங்கிட்டும் இங்கிட்டும் திரிய, //
இதே வெலதான் உனக்கு
//இதே வெலதான் உனக்கு//
அப்ப ஆரம்பிச்சது தான். இன்னும் வயசுக் கோளாறு தெளியல
வெடி தேங்காய் வரட்டும்
Post a Comment