பொட்ட ரங்கனின் தலையிலேயே ஒரு சின்ன தேங்காய் அளவுக்கு புடைச்சிருச்சு. ஒரு வழியா பறிச்ச தேங்காய்களை ஆளுக்கொண்ணாய் கையில பிடிச்சி கிட்டு திரும்ப பள்ளிக்கோட மைதான புளிய மரத்தடி. இப்ப ஆப்ரேசன் வெடி தேங்காயோட அடுத்த கட்டம். பள்ளிக்கூட மைதானத்துல ஒரு ஓரத்துல ஒரு அங்காளம்மா கோவில். கோயிலுன்னா கோபுரம் சிலை எல்லாம் இல்ல. ஒரே ஒரு கல்லு மேடை. மேடைக்கு மையத்துல ஒரு சூலாயுதம். அந்த சூலாயுதம் பக்கத்துல ஒரு சின்ன கல்லு பிறைல எரியுற அகல் விளக்கு. அவ்ளோ தான். இந்த கல்லு பிறை அகல் விளக்க தெனமும் சாயங்காலம் ஒரு கிழவி வந்து எண்ணெய் ஊத்தி ஏத்தி வைக்கும். இப்ப அந்த விளக்கு அணஞ்சி கிடக்க மொத அத பத்த வச்சாங்க. அந்த வெளக்கு வெளிச்சத்துல சரசரன்னு தேங்காய்கள அருவா வச்சி சீவி எடுத்தார் முனிய மாமா. அப்பறம். அவரு தேங்கா சீவிக்கிட்டு இருந்தப்ப பக்கத்துல இருந்த புங்க மரத்துல இருந்து நாலு கிளகள ஒடச்சி மூர்த்தி அண்ணன் அந்த கிளல இருந்து ஆணி மாதிரி 10 இல்ல 12 குச்சிகள சீவினாரு. இந்த மர ஆணிங்க நுனில தடிச்சி கீழே வர வர கூரா இருந்துச்சி. என்ன நடக்குதுன்னு எனக்கொண்ணும் புரியல. இப்ப முனிய மாமா பட்ட சீவின தேங்காய் கண்ணுகள அருவா நுனி வச்சி கொத்தி ஓட்டை ஆக்கினார். வோவ்ரு தேங்காயிலயும் 3 கண்ணு திறந்துச்சி இப்ப. திறந்த கண்ணுக வழியா கேசவ மாமாவும், கணேசண்ணனும் சக்கரயும், பொரியையும் உள்ள திணிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சம் தேங்காய் தண்ணி வழிஞ்சி வர ஆரம்பிச்சிது. கண்ணு தொறந்த தேங்காய்களுக்குள்ள பொரி, சக்கர திணிச்சதும், அடுத்து அந்த தேங்கா மூர்த்து அண்ணன் கைக்கு போகும். இப்ப திறந்திருக்க ஒவ்வொரு கண்ணையும் சீவி வச்ச புங்க மர ஆணி வச்சி கல்லால தட்டி தட்டி இறக்கி அடைச்சாரு மூர்த்தியண்ணன். எல்லா தேங்காயும் இதே போல தயாராச்சு.
அடுத்து அல்லக்கைக அடுப்பு பத்த வைக்கிறதாட்டம், கொஞ்சம் சுள்ளி, கொஞ்சம் காஞ்ச பருத்தி மாரு, கொஞ்சம் வக்கலு எல்லாம் போட்டு பழைய பேப்பர வச்சி பத்த வச்சி தீமூட்டம் போட்டங்க. இந்த தீமூட்டம் கோயிலு கல்லு மேடைக்கு பின்னாடி காத்து அடிக்காத இடத்துல அமைவா. நல்லா தீ பத்துணதும் எல்லா தேங்காய்களும் நெருப்புல போட்டாங்க. அடுத்து ஒரு பத்து பதினஞ்சி நிமிசம் யாரும் பேசல. மாறி மாறி சுள்ளிகள போட்டு தீய எரிய விடுறது தான் வேலை. அந்த இரா வேலைல கொஞ்சமா அடிச்ச குளிருக்கு அந்த தீ நல்லா எதமா இருந்துச்சி. எரியற தீயில கேசவ மாமா ஒரு சிகரட்ட பத்த வைக்க, சின்ன பசங்க நாங்கள்ல்லாம் ஆச்சர்யமா பாத்தோம். ஏலே எவனாச்சும் நானு சிகரட்டு குடிக்கிறத பத்தி வேற யார்கிட்டயும் சொன்னீங்க கோனாரு தோட்டத்து எருக்குழில தள்ளி மொத்தமா மூடிப் புடுவேஞ்சரியா? மாமாவுக்கு பதில் சொல்லக் கூட எங்களுக்கு தகிரியம் இல்லை.
அடுத்து டொப்புன்னு ஒரு சத்தம். மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. மூர்த்தி அண்ணன் கைல இருந்த குச்சியால கங்குகள ஒதுக்கி ஓடு தெறிச்ச தேங்காய மெல்ல வெளில உருட்டி எடுத்துச்சு. நல்ல சூடு. அத அப்படியே முனிய மாமா துண்டுல போட்டு எடுத்துகிட்டு போய் பக்கத்துல இருந்த அடிகுழாய்ல கழுவினாங்க. என்ன் ஆச்சர்யம்? தேங்காய் மூடி மட்டும் தெறிச்சி போயிருக்க உருண்டையா பந்து மாதிரி உள்ளாற இருக்க தேங்காய் மட்டும் அழகா வெடிச்சி வெளில வந்திருந்துச்சி. அடுத்தடுத்து தேங்காய்க ஒவ்வொண்ணா இப்படி வெடிச்சி எல்லாம் கழுவி எடுத்து முனிய மாமா துண்டுல கட்டிக்கிட்டாங்க. அடி கொழா தண்ணி பிடிச்சாந்து தீ மூட்டத்துல ஊத்தி சுத்தமா அணச்சாச்சி. இப்ப லேசா கருகல் வாடையும் தேங்காய் பர்பி போல ஒரு வாடையும் கலந்து அடிச்சது காத்துல. அத்தோட பக்கத்து சோல காட்டுலேர்ந்து அப்பத்தாம் பால் கட்டுற பருவத்துல இருக்க சோளக்கதிரு வாசம் வேற. புளிய மரத்து தூருல உக்காந்து அருவா வச்சி மூர்த்தி அண்ணன் வெடி தேங்காய்கள பிளந்து வகுந்து சில்லு போட்டு ஆளுக்கு கொஞ்சமா கொடுத்தாரு.
தேங்கா தண்ணில பொரியும், சக்கரையும் ஊறி அதுலேயே அப்படியே தீ சூட்டுக்கு வெந்து பதமா அந்த இனிப்பு சாறெல்லாம் தேங்கா பத்தைல இறங்கி அத்தோட தீல கொஞ்சமா கருகுன வாசத்தோட ஆகா என்ன சுவ.. வாழ்க்கைல அதுக்கப்பறம் இது வரை அதும்மாதிரி எதும் சாப்பிட்டதில்லை. அதுக்கப்பறம் நான் பாட்டி ஊர் போகும் போது ஓரிரு தடவைகள் மூர்த்தி அண்ணனை வழியில் பார்த்து சிரித்ததோடு சரி. அவர் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க விவசாயத்தில் இறங்கி விட்டாரம். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாய் காலேஜ், வேலை என பாட்டி ஊருக்கு போவதே அத்துப் போய் விட்டது.
இது நடந்து முடிஞ்சி 13 வருசம் கழிச்சி வாழ்க்கை என்னை அமெரிக்கால கொண்டு வந்து தள்ளீருச்சி. ரொம்ப நாள் கழித்து என் பாட்டிக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தேன். ஊருல என்ன விசேசம் என்று கேட்ட போது பாட்டி கேட்டார்கள்.
ஊருல நம்ம தெரு மூர்த்தி ஞாபகம் இருக்காடா உனக்கு?
நல்லா ஞாபகம் இருக்கு. அவர் இப்ப எப்படி இருக்காரு?
அவன் போன வாரம் மூளைக்காச்சல்ல செத்துப் போய்ட்டாண்டா. அவனுக்கு கல்யாணம் ஆகி மூணு புள்ளைக பாவம்.
எனக்குள் பொட்டென்று வெடி தேங்காய் வெடித்தது. இம்முறை தேங்காயின் சுவை என்னமோ கசந்தது என் வாய்க்குள்.
Monday, October 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
இப்படி சோகமா முடிச்சிட்டீரே.
இது உண்மைல நடந்தது ராசா. அத்த அப்படியே எழுதி இருக்கேன்
வணக்கம் நாநா.எழுத்தும்,நடையும் யதார்த்தமாக வருகிறது உங்களுக்கு.முடிவின் சோகம் மனதை உறுத்துகிறது.
நானும்,கூட்டாளிகளும் ஏதாவது ஒரு தோட்டத்தில் மாங்காய்,கொய்யா திருடினால் ஊரில் எந்த தோட்டத்திலும் பழ வகைகள் காணாமல் போனால் எங்கள் பட்டாளத்தையே வந்து சேர்ந்தது நினைவுக்கு வருகிறது.
வணக்கம் ராஜ நடராஜன். தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
miga arumaiyaai oru graamathu sutrupurathai vivarithuleerkazh...
Very sad.
Who discovered this vedi thengaa preparation?
I've never heard of this any were else.
Post a Comment